Skip to main content

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 02

எனது வானொலி அனுவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைத்தளத்தை பதிவு செய்தேன் ஆனாலும் நேரமின்மை காரணமாக அதனை உரிய வகையில் இதுவரை மேற்கொள்ள முடியவில்லை ஆனாலும் இப்போது என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த இந்த இடைவெளியில் இதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன்.


10 வருடங்களாக வானொலி ஊடகத்துறையில் பயணிப்பவன் என்ற வகையில் எனது அனுபவங்களை தொடர்ந்து 10 பதிவுகளில் வலையேற்ற எண்ணியுள்ளேன்.


ஓலிபரப்பு துறையில் சூரியன் தான் எனது தாய்வீடு 1999 முதல் இன்று வரை ஏதோ ஒருவிதத்தில் சூரியனோடு என்னை அடையாளப்படுத்தியே வருகின்றேன்.

என்னை ஒலிப்பரப்பாளனாக்க முடியும் என்று நம்பிய எனது ஒலிபரப்பு ஆசான் திரு.நடராஜயசிவம் இன்றும் என்றும் மரியாதைக்கும் நன்றிக்கும் உரியவர்.

அவரால் ஒலிபரப்புதுறை வாய்ப்பு அன்று வழங்கப்படாதிருந்தால் எனது வாழ்வே மாறிப்போயிருக்கும்.

இப்போது எங்காவது ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்.

வாழ்வின் சுவாரசியமான பல பக்கங்களை எனக்கு ஊடகத்துறை அறிமுகப்படுத்தியது.

எனது சமகால அறிவிப்பாள்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகளை சூரியனில் நான் அனுபவித்தமைக்கு திரு.நடராஜயசிவம் அவர்கள் தான் முக்கிய காரணம் என்பதை எந்த பொழுதிலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

சூரியனில் பகுதி நேர ஒலிப்பரப்பாளனாக இணைந்து மிகக்குறுகிய காலத்தில் முழு நேர அறிவிப்பாளனாகி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நேற்றைய காற்றை தயாரித்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தமைக்கு அவர் தந்த ஊக்கம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.

சூரியனில் நேற்றைய காற்றில் ஆரம்பித்த என் பயணம் பின்னர் சூரியப்பார்வைகள்,ஞாயிறு சூரியராகங்கள்,இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதர்கள் என சவாலான நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கும் சந்தர்ப்பங்களை வழங்கியது.

வெறுமனே அறிவிப்பாளனாய் பாடல்களை ஒலிப்பரப்பி விட்டு செல்லாமால் ஒலிபரப்பின் பல்வேறு பரிமாணங்களையும் குறுகிய காலத்தில் தரிசிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு புதிய உலகம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

சூரியனில் எனது முதல் பருவம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்த போதிலும் கணிசமான அனுபவத்தை ஒலிப்பரப்பு உலகில் எனக்கு ஏற்படுத்தி தந்தது.

ஓலிபரப்பு உலகில் தடம் படிக்க வழிசமைத்த முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் அவை தந்த அனுபவங்களை தொடர்ந்து உங்களோடு பகிர்;ந்து கொள்ளப் போகின்றேன்.

வானொலி என்பது வேறெந்த ஊடகத்திற்கும் இல்லாத தனித்துவங்கள் வாய்ந்த ஊடகம்.அதனை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு என்றும் உண்டு.

தற்போதுள்ள பெரும்பாலான அறிவிப்பாளர்கள் ஜனரஞ்சக மாயைக்குள் சிக்கிவிட்டார்கள் என்பதும் அதில் இருந்து வெளியேறி ஒலிபரப்புத்துறையின் அடுத்த பக்கங்களை பார்க்க பிரியப்படுவதில்லை என்பதும் எனது வருத்தம்.

அந்த நிலையை மாற்றுவதற்கான ஒரு சிறு துரும்பாக இந்த அனுபவ பகிர்வு அமைய வேண்டும் என்பது எனது அவா .இனி எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளும் அவை தந்த அனுபவங்களும்

சூரியப்பார்வைகள்

சூரியப்பார்வைகளை தயாரித்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய விடயமாக நான் கருதுகின்றேன்.

ஒலிபரப்பு ஊடகத்துறையை இதன் மூலமாகவே நான் அறிந்து கொண்டேன்.

சூரியன் செய்திப் பிரிவினரும் நிகழ்ச்சி பிரிவினரும் கூட்டாக தயாரித்து வழங்கி மக்களின் பேராதரவை பெற்ற சமாகல நிலவரம் தொடர்பான சஞ்சிகை நிகழ்ச்சி தான் சூரியப்பார்வைகள்.

(அதுபோன்ற நிகழ்ச்சியை தற்போதைய ஊடக் சூழலில் நினைத்து பார்பதே ஆபத்தானதாகி விடும்)

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் அபர்ணாசுதன் அவர்களால் தயாரிக்கப்பட்டு வந்தது அவர் இரண்டு வாரங்கள் சுகவீன விடுமுறையில் செல்ல நேரிட்டமையால் எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்காலிகமாக கிடைத்த வாய்ப்பு தானே என்றில்லாமல் எனக்கான நிகழ்ச்சியாகவே அதனை நான் கருதினேன்.15 நிமிட நேர நிகழ்ச்சிக்காக நானும் சூரியனின் செய்தியாசிரியர் இந்திரஜித்தும் ஏறத்தாள 10 மணித்தியாலங்கள் வரை உழைத்தோம்.

இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் சத்தியமான உண்மை.

விடுமுறை முடிந்து வந்த அபர்ணா எனது கடின உழைப்பையும் ஈடுபாட்டையும் உணர்ந்து சூரியப் பார்வைகளை தொடர்ந்து தயாரிக்குமாறு என்னை உற்சாகப்படுத்தியதோடு தனது மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்த சூரியப்பார்வைகளை எனக்கு விட்டுக் கொடுத்தமையை இன்றும் நன்றியோடு நினைத்துக் கொள்கின்றேன்.

அப்போது இருந்த ஊடகங்கள் மீதான நெருக்கடிகளின் மத்தியில் எங்கள் மக்களுக்கு தேவைப்படும் செய்திகளை இனம் கண்டு அவற்றின் பின்னணிகளை ஆராய்ந்து பக்கச்சார்பற்ற முறையில் அதனை அறிக்கையிட வேண்டும்.

மக்களுக்கு உண்மைகளை சொல்லாமல் சொல்வது தான் சவாலான விடயமாக இருந்தது.

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுதாபன முகாமைத்துவம் அப்போது செய்திப் பிரிவிற்கு வழங்கியிருந்த சுதந்திரம் இந்த நிகழ்ச்சியை தரமானதாக வழங்க உதவியது.

தமிழ் பேசும் மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழந்த அன்றைய பொழுதில் சூரியன் வழங்கிய நடுநிலையான செய்தி அறிக்கைகளும் சூரியப் பார்வைகளும் தனித்துவமான வானொலியாக சூரியனை மக்கள் அடையாளம் காண வாய்பை ஏற்படுத்தி கொடுத்தது என்பது அவராலும் மறுக்க முடியாத உண்மை.

சூரியப்பார்வைகளுக்காக நாங்கள் மேற்கொண்ட நேர்காணல்கள் பல்வேறு தரப்பினதும் கவனிப்பை பெற்றன.அவை நேர்காணல் தொழில்நுட்பங்களை தேடி அறிவதற்கு என்னை ஊக்குவித்தன.

பொதுவாக அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் சூரியப்பார்வைகளை அவதானிக்கும் நிலை உருவானது.

சொல்லா முடியாத செய்திகளை பொருத்தமான பாடல் வரிகளை இணைப்பதன் ஊடாக சொல்ல முற்பட்ட போது அது மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

சூரியனின் யாழ் பிராந்திய செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலையை தொடர்ந்து நாங்கள் வழங்கிய சூரியப்பார்வைகள் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று.

2000ம் ஆண்டு இறுதியில் சூரியனில் இருந்து விலகும் வரை புதிய மாற்றங்களை உட்புகுத்தி தரமான முறையில் அதனை தாயரித்து வழங்கி வந்தேன்.

செய்திகளை இனம் காணல் அவற்றை வானொலிக்கு ஏற்றவாறு வடிவமைத்தல்,செய்தி அறிக்கையிடல்,நேர்காணல் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வு அறிக்கைகள்;,விசாரணை அறிக்கையிடல் என செய்தி ஊடகத்துறையில் பல விடயங்களை நான் அறிந்து கொள்ள சூரியப்பார்வைகளின் தயாரிப்பு எனக்கு உதவியது.

மென் பொருட்கள் மூலமாக விளம்பரங்கள் மற்றும் நிலைய குறியிசைகள் மட்டுமே அப்போது தயாரிக்கப்பட்டு வந்தன.

15 நிமிட நிகழ்ச்சியை மென்பொருள் மூலம் தாயாரிக்க முடியாத நிலையில் ஒலிபரப்பு இயந்திரங்கள் மூலமாகவே சூரியப்பார்வைகளை தயாரித்தோம்.

மினி டிஸ்க் எனப்படும் கருவியில் ஒலிப்பதிவுகளை மேற்கொண்டு தேவைப்படும் பகுதிகளை வேறொரு மினிடிஸ்க்கிற்கு மாற்றம் செய்து பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து 15 நிமிட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.

முழுமையான ஈடுபாடும் பொறுமையுமல் இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது.இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும் தயாரிப்பு சூரியப்பார்வைகள்.

சில சந்தர்ப்பங்களில் 10 மணி நேர உழைப்பும் கவனயீனத்தால் காணமல் போன கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.
ஒரு நாள் ஞாயிறு காலை சூரியராகங்களை தொடர்ந்து இரவு 9 மணி வரை சூரியப்பார்வைகளை தயாரித்து நிகழ்ச்சி அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன்.

அலுவலக வாகன சாரதிடயிடம் கெஞ்சிக் கூத்தாடி சூரியனை ஒலிக்கவிட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்தால் நிகழ்ச்சி ஒலிபரப்பாக வேண்டிய நேரத்தில் அறிவிப்பாளர் பாடலை ஒலிபரப்பினார்.

புதறி அடித்து கலையகத்திற்கு அழைப்பு எடுத்தால் Mini-disc – Error காட்டுவதாகும் அதில் இருந்த எல்லாம் அழிந்து விட்டதாகவும் மிகவம் கூலாக சொன்னார் அறிவிப்பாளர்,அழுவதா இல்லை அவரை திட்டுவதா என்ற குழப்பத்தில் அழைப்பை துண்டித்தேன்.

இது உள்வீட்டு சதியா இல்லை உண்மையில் தொழில்நுட்பக் கோளாறா என்பத இன்றுவரை எனக்கு தெரியாது.

இந்த அனுவத்தை அடுத்து இரண்டு மினி டிஸ்கில் நிகழ்ச்சியை பதிவு செய்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்றினேன்.ஒன்று அழிந்தால் மற்றையது கைகொடுக்கும் என்ற ஏற்பாடு ஆனால் அதன் பின்னர் அவ்வாறான அனுபவம் ஏற்படவில்லை.

இதேவேளை சூரியப்பார்வைகள் மூலம் சில சம்பிரதாயங்களையும் தகர்க்க முடிந்தது.

அதில் மிக முக்கியமானது அப்போது எமக்கு மிகப்பெரும் போட்டியாக உருவெடுத்த சக்தி வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் எழில்வேந்தனை சூரியப்பார்வைகளுக்காக நேர்கண்டமையை குறிப்பிடலாம்.இது வானொலி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் கொள்ளலாம்.

இந்த சக்திக்கு முன்னால் உங்கள் சக்தி யுஜீபி என்ற ரஜினியின் படையப்பா வசனத்தை போட்டு சக்தியை தாக்கி வந்த சூரியன் அந்த வானொலியின் முகாமையாளரை தனது நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டதும் அதேபோல் அவர்களில் முதலாவது ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் சொன்னதும் நான் ஒரு நல்ல ஒலிபரப்பாளனாய் பெருமைப்படும் தருணங்கள்.

நம் நாட்டு இசையமைப்பாளர் ராஜின் இசையமைப்பில் இப்போது வெளியாகியிருக்கும் 1999 திரைப்பட பாடல்கள் குறித்தும் ராஜின் இசைப் பயணத்தில் சூரியனின் பங்கு குறித்தும் பல சுவாரிசியமான விடயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.
(அடுத்த பதிவில்....எங்கள் வீட்டில் உள்ள அறை ஒன்றில் மகிந்தா அண்ணா வழங்கிய ஒலிப்பதிவு கருவிகளை பொருத்தி சிறிதான ஒலிப்பதிவு கூடம் ஒன்றை தயாரித்தோம்.பேரதெனிய பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட கணனி ஒலிப்பதிவுக்கு பயன்பட்டது.முதல் பாடல் பதிவு ஆரம்பிக்கப்பட்ட போது..கதவு தட்டப்பட்டது....)

Comments

அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.... தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா உங்கள் அனுபவங்களை....(போட்டி நிறைந்த ஊடக வாழ்க்கையில் இப்படியான விட்டுக் கொடுப்பை வழங்கிய அபர்ணா அண்ணாவைப் போன்றவர்கள் பாராட்டப் படக் கூடியவர்களே.....)
LOSHAN said…
வாருங்கள் ரமணன்.. மீண்டும் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.. நிறைய எதிர்பார்க்கிறோம்.
ரமணன் said…
நன்றி சப்பிராஸ்,
உண்மைதான் ஒலிபரப்பு உலகம் வித்தியாசமானது வெளிப்படையில் தெரிவதை விடவும் உள்ளே இருந்த பிணைப்புகள் ஆளமானவை.காலம் சிலவேளைகளில் எல்லாவற்றையும் கவிழ்துப் போட்டு விடுகின்றது.பொறுத்திருங்கள் இன்னும் வரும்.
ரமணன் said…
நன்றி லோசன்
பல விடயங்களை உங்களிடம் இருந்து உங்களுக்கு தெரியாமல் கற்றிருக்கிறேன்.உங்களைத் தொடர்ந்து தான் நானும் எனது வலைப்பூவை ஆரம்பித்தேன் அந்த வகையிலும் ஒலிபரப்பு உலகில் எனக்கு முன்னரே பயணத்தை ஆரம்பித்தவர் என்ற வகையிலும் எனது முன்னோடியான உங்கள் வாழத்துக்களுக்கு நன்றி.இந்த தொடரில் உங்களுடனான எனது அனுபவங்களும் எங்கள் இருவருக்கும் பண்டாரவளையில் சாமியார் தந்த சாபமும் கூட வரும்.
வணக்கம் ரமணன் அண்ணா..சூரியனில் உங்கள் குரலில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த எமக்கு உங்கள் எழுத்துக்களும் கவர்கின்றன.
தொடர்ந்து எழுதுங்கள்..
Fazeena Saleem said…
அருமையான பதிவு ரமணன் அண்ணா. நீங்கள் தொகுத்து வழங்கிய சூரியப்பார்வைகள், ஞாயிறு சூரியராகங்கள், நேற்றைய காற்று ஆகிய நிகழ்ச்சிகள் மறக்கமுடியாதவை. உங்களை போன்ற ஒலிபரப்பாளர்களது அனுபவங்கள் நிச்சயமாக பலருக்கு பாடமாக அமையும்.
நீங்கள குறிப்பிட்டிருப்பதை போன்று இன்றைய சூழலில் சூரியப்பார்வைகள் போன்ற ஒரு நிகழ்ச்சி சாத்தியமற்றது. கால மற்றதோடு சூழ்நிலைகளும் மாறும் என எதிர்பர்போம்.
நேற்றைய காற்றும் சூரியப்பார்வைகளும்...

ஒரு நேயராக, சூரியப்பார்வைகளும் செய்திகளுமே சூரியன் மீதான அதீத பாசத்தை எனக்குள் ஏற்படுத்திய நிகழ்ச்சிகள். அதுவரையில் இலங்கையின் வானலையில் கேட்டிராத அனுபங்கள் கிடைத்தது அப்போதுதான்.

இப்போதுதான் அவற்றின் மதிப்பு முழுமையாகத் தெரிகிறது. நேரம் கிடைக்கும்போது பழைய ஒலிப்பதிவுகளை ஏக்கத்துடன் போட்டுக்கேட்பேன். சூரியப்பார்வைகளை இனி நினைத்துப்பார்க்கவும் முடியாது.

ரமணன் அண்ணா!
நேற்றைய காற்றின் நேயர்கள் குறித்தான அனுபவங்களே பத்துப் பதிவுகளுக்குப் போதுமானதாக இருக்குமே? எழுதுவீர்களா?

Popular posts from this blog

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது …

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…