Skip to main content

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை பாகம் 03

ஓவ்வொரு இனமும் தமக்கான அடையாளங்களை இழந்து விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை உடையவன் நான்.அந்த வகையில் எங்கள் நாட்டில் கிடைக்கும் குறுகிய வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் ஊடே தங்கள் கலை தாகத்தை தீர்க்க முயலும் நம்மவர்களுக்கு உரிய வாய்ப்புகளை நம் நாட்டு ஊடகங்கள் வழங்க வேண்டும் என்பது அன்றும் இன்றும் எனது எதிர்பார்பு.
இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரும் நிறுவனம் மேற்கொள்ளும் முதலீட்டில் உருவாகும் திரைப் படத்தில் யாரோ எழுதி யரோ மெட்டமைத்து யாரோ பாடும் பாடலை நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு ஒலிபரப்பி இந்த பாடலை முதலில் தந்நதது நாங்களே என்ற வரிகளை இடைச்செருகி நாங்கள் போடும் கூத்துக்கள் அருவருப்பானவை இதனை நானும் விதிவிலக்கின்றி செய்திருக்கிறேன் என்பது கசப்பான உண்மை.

இப்படியாக தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு நாங்கள் கொடுக்கும் அதி முக்கியத்துவத்தின் சிறு பகுதியை கூட எங்கள் நாட்டு கலைஞர்களுக்கு நாங்கள் வழங்க தவறி விடுகின்றோம்.எங்காவது ஒரிண்டு பேர் தமக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மூலம் அணுகினால் ஏனோ தானோ என்று அவர்களின் பாடல்களை ஒலிபரப்பி அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு எங்கள் கடமைகளை முடித்துக் கொள்கின்றோம்.கேட்டால் அது ஒலிபரப்பும் தரமற்றது, பாடியவரின் குரல் சரியில்லை,தமிழை கொலை செய்திருக்கின்றார் என்று நாங்கள் அள்ளி வீசும் குற்றங்கள் ஓராயிரம்.


உதித் நாரயணன் கடித்து குதறி துப்பும் எச்சிலை கூட அமுதமாக பருகும் எங்களால் எங்கள் ஊரில் இருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும் நம்மவர்களை கை தூக்கி விட முடிவதில்லை.

வெறுமனே எங்கள் முகாமைத்துவங்கள் உள் நாட்டு படைப்புகள் இடம்பெறுவதை விரும்புவதில்லை என்ற ஒற்றை வரி காரணத்தோடு கழன்று விடவே நாங்கள் விரும்புகின்றோம்.உண்மை அதுவல்ல எங்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் மனம் வைத்திருந்தால் எங்கள் நாட்டின் தமிழிசையை இன்னும் பலமாக ஒலிக்கச் செய்திருக்க முடியும்.
எங்கள் படைப்புகளில் குறைகைளை தேடி அவற்றை நிராகரிக்க நியாயம் தேடுவதிலேயே எங்கள திறமைகளை செலவிடுகின்றோம்.24 மணி நேரமும் தென்னிந்திய பாடல்களை ஒலிக்கவிடும் எங்கள் வானொலிகள் நினைத்தால் மணித்தியாலத்திற்கு ஒரு பாடலை நம்மவர் பாடலாக ஒலிபரப்ப முடியும்.அதனை சக்தியில் அபர்ணா ஆரம்பித்த போதிலும் பின்னர் வந்த முகாமைத்துவம் அதனை நிறுத்தி விட்டது.


இந்திய திரையிசையின் தரத்திற்கு எங்களால் ஏன் பாடல்களை தர முடியவில்லை என்ற போது இலங்கையின் மூத்த இசைக் கலைஞர்கள் பலரும் சொன்ன ஒரே பதில் எங்களின் மூலதனம் போதாது என்பது தான்.


பாடல்களின் தரம் என்பது வெறுமனே இசையமைப்பு மற்றும் வரிகளில் மட்டும் தங்கியிருப்பதில்லை மாறாக இன்றை டிஜிட்ரல் ஒலிபரப்பில் அதன் தரம் மிக உயர்வானதாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தென்னிந்திய திரைப்பாடல்களின் இடையில் எங்கள் பாடல்களை ஒலிக்க விடும் போது தர வீழ்ச்சி ஏற்பட்டு நிகழ்ச்சியை அது பாதிக்கும்.


இது தான் எங்கள் வானொலி முகாமையாளர்கள் தெரிவிக்கும் முதன்மையான குற்றச் சாட்டு இது ஏற்றுக் கொள்ள கூடியதும் தான்.புலமையும் வறமையும் சேர்ந்தது தான் நம்நாட்டு கலைஞர்களின் வாழ்கையாக விட்டது.அவர்களுக்குள் இசைஞானியையோ இசையப் புயலையோ தேடாமல் அவர்களின் சுய அடையாளங்களை நாங்கள் இனம் காணவேண்டும்.

வானொலிகள் அடிக்கடி ஒலிபரப்பும் பாடல்கள் தான் நேயர் விருப்பமாகின்றது சில உள் நாட்டு பாடல்களும் அந்த இடத்தை பிடித்தமையை நாங்கள் மறக்க முடியாது.ஆகவே வளரும் கலைஞர்களை எங்கள் சொந்தங்களை எங்களால் முடிந்த அளவு ஊக்கப்படுத்துவோமா ???


இது எனது ஆதங்கம் மட்டுமே நான் சொன்னவற்றில் பலருக்கு உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் நாங்கள் தமிழ் வானொலிகள் ஒருமித்து முயன்றால் எங்கள் இசையில் புது மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.


ஞாயிறு சூரியராகங்கள்


எனது மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது.


இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் வானொலிகளில் இடம்பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு இன்றும் இருக்கின்றது.


ஆரம்பத்தில் அபர்ணாவினால் நடத்தப்பட்டு எனக்கு கையளிக்கப்பட்ட மற்றுமொரு நிகழ்ச்சி இது.


உள் நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டது. நித்தியா மகிந்தகுமார் எனும் இலங்கையின் புகழ்பூத்த பாடகி இந்த நிகழ்ச்சியின் என் சக அறிவிப்பாளராக வாயத்தமை இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகு படுத்தியது.


கலைக்காகவே தங்களை அர்ப்பணித்த குடும்பத்தின் பின்னணியும் நமக்கான இசையை மேலோங்க செய்ய வேண்டும் நமது கலைஞர்களுக்கு வாய்புகள் வழங்க வேண்டும் என்ற வேட்கையும் கொண்டவர் நித்தியா அக்கா.இந்த நிகழ்ச்சி மூலமாக பல புதிய இளம் பாடகர்களை அவர் அறிமுகம் செய்திருக்கின்றார்.கரோக்கி எனப்படும் பாடலிகசகு தொலைபேசி மூலமாக நேயர்கள் பாடும் வாய்ப்பினை இந்த நிகழச்சி வழங்கியது.

புகழ் பூத்த கலைஞர்களை நேரடியாக கலையத்திற்கு அழைத்து அவர்களின் நேர்காணல்கள் மற்றும் நேயர்களுடனான உரையாடல்களுக்கு வளியேற்படுத்திக் கொடுத்தது ஞாயிறு சூரியராகங்கள்.மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்,சகோதர மொழி பாடகி நிரோசா விராஜினி,ரட்டணம் ரட்ணதுரை,ராணி ஜோசப்,கருப்பையா பிள்ளi பிரபாகரன் என பல்வேறு கலைஞர்களை ஞாயிறு சூரியராகங்களில் கலந்து கொள்ள செய்தோம்.

இவர்களின் வாழ்கை அனுபவங்கள் மட்டுமல்ல தெவிட்டாத இசையும் இந்த நிகழ்ச்சியை அழகு செய்தது.

இன்று இலங்கையின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றாக மாறியுள்ள அக்னி இசைக்குழுவின் இந்த அபார வளர்ச்சிக்கு சூரியனும் அபர்ணாவும் ஆற்றிய பங்கு முக்கியமானது.சூரியனின் ஊடக அக்னி இசைக்குழுவிற்கு அபர்ணா வழங்கி மிகப்பெரிய அங்கீகாரம் அவர்களை மக்கள் மத்தியில் பிரபல்யம் மிக்க ஒரு குழுவாக மாற்றியது என்பது மறுப்பதற்கில்லை.
அதேபோல் தான் ராஜ்குமார் தில்லையம்பலம் எனப்படும் பேராதனை பல்கலைக்கழக கணனி பொறியில் பீட மாணவன் ஒருவரும் சூரியன் மூலமாக அடையாளம் காணப்பட்ட மிக முக்கியமான கலைஞர்.
வித்தியாசமான சிந்தனை வீச்சுக் கொண்ட இசைக் கலைஞன் ராஜ்.கணனி பொறியில் பட்டதாரி என்ற போதிலும் இசைக்காக கூடுதல் அர்பணிப்பை செலுத்தி வித்தியாசமான முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருபர்.

சூரியனின் நிகழ்ச்சிகள் வாயிலாக நேயராக எனக்கு அறிமுகமானவர்.
பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இணைந்து சில பாடல்களை தயாரிக்க போவதாகவும்; அதற்கு சூரியன் உதவ வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத வேண்டுகோளை வைத்தார்.சூரியன் கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவுகளை மேற்கொள்வதற்கு உரிய வசதிகள் இருந்த போதிலும் பாடலை பதிவு செய்யும் அளவிற்கு எங்களுக்கு அந்த ஒலிப்பதிவு கூடத்தை தரமாட்டார்கள்.


வேறு இடங்களில் ஒலிப்பதிவு கூடங்களை வாடகைக்கு பெறுவது மிகவும் கடினமானது மிகவும் அதிகமான பணம் தேவைப்படும் என்பதோடு தமிழர்கள் இளைஞர்கள் கொழும்பின் புறநகர் பகுதிகளில் உள்ள ஒலிப்பதிவு கூடங்களுக்கு சென்று வருவதில் பாதுகாப்பு நெருக்கடிகளும அதிகம். இவ்வாறான சிக்கல்களோடு எங்கள் மகிந்தா அண்ணாவை அணுகி இவர்களின் விருப்பம் நடைமுறை பிரச்சினைகள் பற்றி பேசினேன்.


தன்னிடம் உள்ள ஒலிப்பதிவு உபகரணங்களை தருவதாகவும் எங்காவது ஒரு இடத்தில் தற்காலிக ஒலிப்பதிவு கூடத்தை ஏற்பாடு செய்து பாடல்களை பதிவு செய்யலாம் என்றும் மகிந்தா அண்ணா நம்பிக்கையூட்டினார்.

நான் அப்போது இரத்மலானையில் எனது தயாருடன் வசித்து வந்தேன்.எங்கள் வீட்டில் எனக்கான அறையை ஒலிப்பதிவு கூடமாக்குவது சாத்தியமாகும் என்று மனதில் பட்டது.உடனடியாக எதைப்பற்றியும் யோசிக்காமல் மகிந்தா அண்ணாவின் உபகரணங்களை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு போய்விட்டோம்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிக்கள பணிகளுக்காக இருந்த கணனி ஒன்றை ராஜ் ஒரு வாரகாலத்திற்கு பெற்றுக்கொண்டார்.அம்மாவின் சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளால் அறையில் எதிரொலி தடுப்புகள் மற்றும் ஒலித் தடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு எங்களால் முடிந்த அளவிற்கு ஒலிப்பதிவு கூடத்தை தயாரித்து முடித்தோம்.


தனது மனதில் தேக்கி வைத்த இசையை ராஜ் பதிவாக்கினார்,பாடகர்கள் பாடகிகள் என எல்லோருமே பேராதனை வளாக மாணவர்கள்.முதல் பாடலை பதிவு செய்ய ஆரம்பித்த நேரம் வீட்டின் வெளிப்புறக் கதவை யாரோ பலமான தட்டும் சத்தம் கேட்டது.

அப்போதுதான் கொழும்பின் பாதுகாப்பு நெருக்கடிகள் குறித்த விடயம் உறைத்தது.தேடுதலுக்கு வரும் காவல்துறையினர் வந்திருப்பார்களோ என்ற அச்சம் கவ்வ நான் மட்டும் பயத்துடன் செல்கின்றேன்.

அம்மாவும் அலுவலகம் சென்றுவிட்டார் வந்தவர்கள் மேலே சோதனையிட வேண்டும் என்று வந்து எங்கள் ஆயத்தங்களை கண்டால் நிச்சயம் எல்லோருமே கம்பிகளுக்கு பின்னால் தான் இருக்க வேண்டும்.

இந்த எண்ணங்கள் ஓடித்திரிய பதைபதைக்கும் நெஞ்சோடு கதவைத் திற்நதால் எங்கள் வீட்டு உரிமையாளர்.ஒரு கடித உறையோடு நிற்கின்றார் பதிவுத்தபாலாம்..

ஒரு கதவுதட்டும் சத்தம் என் தவறுகளை பிடரியல் அடித்துச் சொல்லி விட்டது.நான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வேலை என்று.


ஆனாலும் எனது பதற்றதையும் பதைபதைப்பையும் நான் ஒலிப்பதிவுகள் நடைபெற்ற அந்த ஒரு வாரமும் எவரிடமும் வெளிப்படுத்தவில்லை.3 பாடல்கள் மற்றும் 3 நிலையக் குறியிசைகளை ஒரு வார உழைப்பின் ஊடே உருவாக்கியிருந்தார்கள்


அவற்றை ஞாயிறு சூரியராகங்களில் ஒலிபரப்பி அவர்களின் ஏக்கங்களை திருப்தி படுத்திபோது பெரிதாக எதனையோ சாதித்த மன நிறைவு ஏற்பட்டது.

அந்த பாடல்களும் நிலையக் குறியிசைகளும் தற்காலிக ஒலிப்பதிவு கூடமாக மாற்றப்பட்ட எனது அறையில் தயாரானது என்பதற்கு எந்த ஆதாரங்களையும் அவை கொண்டிருக்கவில்லை.

இந்த வெற்றியில் மகிந்தா அண்ணாவினதும் நித்தியா அக்காவினதும் பங்கு மிகப்பெரியது.மகிந்தா அண்ணா நேரடியாக வந்து கலையகத்தின் தொழில் நுட்பங்களை நேர்த்தியாக அமைத்து தந்ததுடன் புதிய கலைஞர்களுக்கு நிறைய உற்றசாகமும் அளித்திருந்தார் அன்று சூரியனின் மூலமாக அறிமுகம் பெற்ற ராஜ் தொடர்ந்து சூரியனுக்கு வித்தியாசமான நிலையக் குறியிசைகள் பலவற்றை தந்நதவர் பின்னர் அபர்ணாவினால் சக்தியிலும் அறிமுகம் செய்யப்பட்டு சக்திக்கான புதிய நிலையக் குறியிசைகளை வடிவமைத்துக் கொடுத்தவர்.


இப்போது தனது அடுத்த அவதாரத்தை ராஜ் எடுத்திருக்கின்றார்.ஆம் தென்னிந்தியாவில் நம்மவர்களினால தயாரிக்கப்படும் 1999 என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் நம்ம ராஜ் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

சூரியனின் ஊடக அறிமுகமான ஒருவர் இன்று திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்திருக்கின்றார் அவரின் இசைப் பயணம் பஞ்சு மெத்தைகளின் மீதானதாக இருக்கவில்லை.பல சவால்களை சந்தித்து தான் இந்த இடத்தை அவர் இன்று அடைந்திருக்கின்றார்.


முழு நேரமாக இசையை தொழிலாக கொள்ளாமல் இலங்கையின் முன்னணி நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி நிலையில் இருந்தவாறே இசையுலகில் பயணிப்பது அத்தனை இலகுவானதல்ல.ஆனாலும் தனது ஓய்வு நேரம் முழுவதையும் இசைக்காக அர்ப்பணித்து உயர்ந்து நிற்கும் ராஜிற்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.புதிதான தொழில் நுட்பங்கள் எங்கு வந்தாலும் அவற்றை தேடி அறிவதில் ஆர்வம் மிக்கவர் தனது இசையைபோலவே பாடல்களின் தரத்திலும் அதிக அக்கறை கொண்டவர்.
அதனால் தான் இன்று இந்த இடத்தை அடைய முடிந்திருக்கின்றது.

1999ல் எனக்கு அறிமகமான நண்பர் ராஜ் பத்து வருடங்களின் பின்னர் 1999 எனும் படத்தின் ஊடாக இசையமைப்பாளராகியிருப்பது ஆச்சரியம் தான்.


இருந்த போதிலும் ராஜில் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது.தனது முதல் படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களில் 5 பாடல்கள் இந்திய பாடகாட்களின் குரல்களில் தான் ஒலிக்கின்றது.

ஆறாவது பாடலில் சக்தியின் சுப்பர் ஸ்ரார் தேடலில் கிடைத்த பாடகியான பிரசாந்தினி திப்புவுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கின்றார்பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் ராஜின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளமை பெருமைக்குரியது என்றாலும் எங்கள் நாட்டு பாடகர்களை அறிமுகம் செய்யாதமை வருத்தத்திற்குரியது.


தனது முதல் வாய்பினை உரிய முறையில் பயன்படுத்தி தனக்கான இடத்தை அடைவதற்கு இந்திய பாடகர்கள் எஸ்.பி.பி, திப்பு, கார்திக், ஹரிணி போன்றவர்களை பயன்படுத்தியிருக்கலாம் அதனை தான் யாராக இருந்தாலும் செய்திருப்பார்கள்.


ஆனால் இனிவரும் காலங்களில் ராஜ் நம்நாட்டு பாடகர்களையும் தனது திறமை மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.உங்களை போல் நாடுகடந்து பணிபுரியும் வாய்ப்பு இங்குள்ள எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று கூற முடியாது.

இங்கு போட்டி நடுவர்களாக வந்து இங்குள்ள பாடகர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி விட்ட சென்று அதன் பின்னர் இங்கு வந்து போனதையே மறந்து விட்ட ஜசி கிப்ற் மற்றும் பரத்வாஜ் போன்வர்களை இனியும் நம்பி நாங்கள் ஏமாறக் கூடாது.எங்கள் கலைஞர்களுக்கு நாங்கள் தான் எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் நீங்கள் எங்கள் கலைஞர்களின் வேதனைகளை நேரடியாக கண்டு உணர்ந்தவர் என்ற வகையில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் சக பயணியாய் எங்கள் கலைஞர்களையும் அழைத்துச் செல்லுங்கள் உங்கள் மூலமாக அவர்களம் வளம் பெறட்டும்.


தற்போது உங்கள் இசையில் வெளிவந்த பாடல்களில் பின்னணி குரல்களில் இடம்பெற்றுள்ள பாடகிகள் அடுத்த முறை முழுமையான பாடல்களை தர வேண்டும்.ஞாயிறு சூரியராகங்களின் வெற்றியாக நான் ராஜின் இந்த வளர்ச்சியை பார்க்கின்றேன்.

அது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்திருந்தால் இன்னும் பல திறமையாளர்களை நாங்கள் பெற்றிருக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.இன்னும் கூட காலம் கடக்கவில்லை இரண்டு வானொலிகள் நம்மவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.


இருவருக்கும் தாராளமான நிகழ்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

லோசன் இலங்கையின் கலைத்துறையில் தவிர்க்கப்பட முடியாத குடும்பத்தின் வாரிசு என்பதும் எம்மவர்கள் மீதான ஈடுபாடு அதிகம் கொண்டவர் என்பதும் மறுக்கப்பட முடியாதது.

அதுபோல் தான் நவநீதனும் புதுமைகளை தேடிப் பயன்படுத்த துடிக்கும் இளைஞர் சிறிய வயதில் பெரிய பதவியை பெற்ற திறமையாளர்.இவர்கள் இருவரும் நம்நாட்டு கலைஞர்களுக்கு தற்போது வழங்கி வரும் ஒத்துழைப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஓரே வேண்டுகோள்.

உங்கள் எல்லைகளுக்குள் உங்களால் முடிந்த அளவிற்கு எங்கள் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளை வழங்குங்கள்.

பெரிய இசைப் புரட்சிக்காக இல்லாவிட்டாலும் எங்கள் காலத்தில் எங்கள் இசை இறந்துவிடாமல் காப்பதற்கான முயற்ச்சியாக இருக்கலாம் அல்லவா ?

அதேவேளை வெறுமனே வானொலிகளை மட்டும் குற்றம் சொல்லி எங்கள் இசை வளர்ச்சி பெறதாமைக்கு ஊடகங்களில் ஒத்துழைப்பின்மை மட்டும தான் காரணம் என்று குற்றம் சாட்டி விட்டு சென்று விட முடியாது.

எங்கள் கலைஞர்களில் எத்தனை பேர் முழுமையான ஈடுபாட்டுடன் தமது படைப்புகள் தரமாக அமைய வேண்டும் என்று பாடுபடுகின்றார்கள் என்ற கேள்விக்கான பதிலையும் தேடித்தான் ஆக வேண்டும்.


என்னதான் உயிரைக் கொடுத்து உழைத்து மெட்டுப் போட்டாலும் பாடல்களை உயிரூட்டத்துடன் யாரும் பாடுவதாயில்லை என்று ராஜ் ஆதங்கப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

திப்பு பாடிய ஒரு பாடலை இங்குள்ள ஒரு பாடகரிடம் கொடுத்து சுமார் நான்கு நாட்களாக பதிவு செய்தும் அவர் எதிர்பார்த்தது போல் அந்த பாடல் வரவில்லை என்பது ராஜின் குற்றச்சாட்டு.

குறிப்பிட்ட பாடகர் வழங்கப்பட்ட இராகத்திற்கு அப்பால் சென்று தனது கற்பனாவதாங்களின் ஊடு பாடலுக்கு உயிர் சேர்க்கவில்லை அந்த கலையை இங்கு நாங்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது தான் ராஜின் ஆதங்கம்.

பாடல் உயிர்த் துடிப்புடன் இல்லாவிட்டால் அந்த பாடலை யாரும் கேட்கமாட்டார்களே அதனால் தான் இந்திய பாடகர்களை நாட வேண்டி எற்படுகின்றது என்பது ராஜின் வாதம்.
பயிற்ச்சிகளின் மூலமாகதான் இந்திய பாடகர்களில் பெரும்பாலானவர்கள் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் கடின உழைப்பும் கலை மீதான ஈடுபாடும் புதிது புதிதாக தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் ஈடுபாடும் இல்லாவிட்டால் எந்த கலைஞனும் உயர முடியாது இது பாடகர்களுக்கு மட்டுமல்ல புதிதாக வளரும் அறிவிப்பாளர்களுக்கும் பொருத்தமானது.


ஏதோ ஓரு வகையில் அறிவிப்பாளாராகும் வாய்ப்பு கிடைத்து விட்டால் போதும் என்ற எண்ணம் இன்று பலரிடம் இருப்பதையும் அதனால் அவர்களின் நிகழ்ச்சிகள் புதுமைகளின் தேடல்கள் இன்றி வெறுமை சூழந்து இருப்பதை வேதனையுடன் அவதானிப்பதை தவிர எதுவும் செய்ய முடியாதிருக்கின்றது என்னால்.

Comments

ரமணன் ராஜ் எங்கள் பாடசாலை மாணவன் வடமராட்சியில் புகழ்பூத்தவர் சூரியனின் தயவால் இலங்கைமுழுவதும் தெரிந்தவர், இன்று உலகம் முழுவதும் தெரியப்போகின்றார் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. இவர் தன் முதல் முயற்சியில் இந்தியப்பாடகர்களை பாடவைத்ததில் தப்பில்லை காரணம் சிலவேளைகளில் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாகவும் இருந்திருக்கலாம்.


//இங்கு போட்டி நடுவர்களாக வந்து இங்குள்ள பாடகர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி விட்ட சென்று அதன் பின்னர் இங்கு வந்து போனதையே மறந்து விட்ட ஜசி கிப்ற் மற்றும் பரத்வாஜ் போன்வர்களை இனியும் நம்பி நாங்கள் ஏமாறக் கூடாது.//

ஜாசி கிப்ட் பரத்வாஜ் வரிசையில் சக்தியின் சூப்பர் ஸ்ராரில் நடுவராக வந்த தீனாவை மறந்துவிட்டீர்கள். தமிழ்மொழியின் சக்தியின் அடுத்த நிகழ்ச்சி சூப்பர் வாய்சர்ஸ்( என்ன தமிழ்ப் பற்று).
vasee said…
////பாடல் உயிர்த் துடிப்புடன் இல்லாவிட்டால் அந்த பாடலை யாரும் கேட்கமாட்டார்களே அதனால் தான் இந்திய பாடகர்களை நாட வேண்டி எற்படுகின்றது என்பது ராஜின் வாதம்.
பயிற்ச்சிகளின் மூலமாகதான் இந்திய பாடகர்களில் பெரும்பாலானவர்கள் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் கடின உழைப்பும் கலை மீதான ஈடுபாடும் புதிது புதிதாக தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் ஈடுபாடும் இல்லாவிட்டால் எந்த கலைஞனும் உயர முடியாது இது பாடகர்களுக்கு மட்டுமல்ல புதிதாக வளரும் அறிவிப்பாளர்களுக்கும் பொருத்தமானது////

ராஜின் வாதம் சரியானது அண்ணா.... நம்மவர்கள் தங்கள் துறைகளில் சிகரம் தொடுவதற்கு அத் துறை சாந்த சிறப்பு பயிற்சிகளை பெற்று தேர்ச்சி பெறவேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது... வெறுமனே நாங்கள் இங்கே இந்த பட்டம் பெற்று விட்டோம், எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. அத்துடன் திறமை இருக்கும் நபர்களை அடையாளம் காணும் ஊடகாங்களும் அது சார்ந்த நிகழ்ச்சிகளும் ஷக்தி சூப்பர் ஸ்டார் போன்றவை வெறுமனே வர்த்தக ரீதிகாக மட்டும் நிழ்க்சிகளை நடத்தி முடிக்காமல் வெற்றி பேருபவர்களது திறமைகளை இன்னும் அதிகரிபதட்கான நடவடிக்கைகளை ஏடுக்க வேண்டும்.
////வெறுமனே எங்கள் முகாமைத்துவங்கள் உள் நாட்டு படைப்புகள் இடம்பெறுவதை விரும்புவதில்லை என்ற ஒற்றை வரி காரணத்தோடு கழன்று விடவே நாங்கள் விரும்புகின்றோம்.உண்மை அதுவல்ல எங்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் மனம் வைத்திருந்தால் எங்கள் நாட்டின் தமிழிசையை இன்னும் பலமாக ஒலிக்கச் செய்திருக்க முடியும்.
எங்கள் படைப்புகளில் குறைகைளை தேடி அவற்றை நிராகரிக்க நியாயம் தேடுவதிலேயே எங்கள திறமைகளை செலவிடுகின்றோம்.////

கலைஞர்களை அறிமுகப் படுத்த ஆரம்பித்தவன் சூரியன் தான். அதன் பின்னால் தான் ஏனைய வானொலிகள்....
சூரியன் அறிமுகமாக்கிய எத்தனையோ பேர் இன்று இசை உலகில் மட்டுமல்லாமல் அறிவிப்புத் துறையிலும் வெற்றி நடை போடுகின்றனர். ஆனால் அவர்கள் எந்த இடத்திலும் சருக்கியதில்லை. சில சதிகள் அவர்களது திறமையை முடக்க நினைக்கிறது. (பிறரை தட்டி விட்டு தான் அந்த இடத்தை அடைய நினைப்பவன் ஒரு நல்ல கலைஞன் அல்ல. )

உங்களது நிகழ்ச்சிகள் எதுவுமே இதுவரையில் தரம் குறைந்ததாக இருந்ததில்லை. சாட்சியாய் "சூரியன் செய்திகள் " என்கிற அந்த கம்பீரக் குரலே போதும் அண்ணா.....

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வழி பின்பற்றி வளரும் எம் போன்ற அறிவிப்பாளருக்கு சிறந்த பலனாய் அமையும்......

வாழ்த்துக்கள் அண்ணா.......
//பயிற்ச்சிகளின் மூலமாகதான் இந்திய பாடகர்களில் பெரும்பாலானவர்கள் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் கடின உழைப்பும் கலை மீதான ஈடுபாடும் புதிது புதிதாக தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் ஈடுபாடும் இல்லாவிட்டால் எந்த கலைஞனும் உயர முடியாது //

சத்தியமான வார்த்தைகள். நானும் டிராக்கில் பல பாடல்களைப்பாடி தற்போது ஓரிரு படங்களில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளேன். இத்தனைக்கும் நான் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றவனல்ல. எனது தொடர் முயற்சியால்தான் குரல் வசமானது.

உங்களின் சேவை தொடர வாழ்த்துகள்.
Raj said…
ரமணன்,
எனது இசைப் பாதையில் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எப்பொழுதும் நான் கண்டிருக்கிறேன். எனது இசை வானலையில் முதல் முதலாக ஒலிததிலிருந்து , 1999 படத்தின் பால்கள் எமது மக்களை முதல் முதலாக சேர்ந்தது வரைக்கும் உங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு இருந்து வருகிறது . இப்போது இந்த வலைப்பதிவு ... இந்த மரியாதை.... மிக்க நன்றிகள் ரமணன் .... நிச்சயாமக..இனி வரும் காலங்களில் எமது பாடகர்களை அறிமுகப் படுத்துவேன் .. ஆனால் , எமது மக்களுக்கும் வானொலி நிலையங்களுக்கும் ஒரு வேண்டுகோள் ...நீங்கள் எமது பாடகர்களை இந்திய பாடகர்கர்களின் அதே நிலையில் வைத்து அங்கீகரிக்க வேண்டும் ! நான் மட்டுமல்ல ..இன்னும் பல உள்நாட்டு இசையமைப்பாளர்கள் தரமான பாடல்களை தருவார்கள்
பெரிய பதிவு என்றாலும்,
உங்கள் எண்ணக்குமுறல்களை வெளிப்படுத்திய பதிவு!!
எம்.லோகா said…
ராஜ் அண்ணா இசையில் மட்டும் அல்ல பல துறைகளில் மிகவும் திறமை சாலி.. ராஜ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் ரமணன் அண்ணாவின் ஆதரவு பாராட்டத்தக்கது.. நான் ரமணன் அண்ணாவின் ஞாயிறு சூரிய ராகங்களின் ரசிகை.. ராஜ் அண்ணாவின் நிகழ்ச்சியை ஞாயிறு சூரிய ராகங்களிலும் சக்தியின் நிகழ்ச்சியிலும் நான் கேட்டு உள்ளேன்.. ராஜ் அண்ணாவின் பணி தொடரட்டும் யாழ் வடமராட்சியை சேர்ந்த அவரின் புகழ் எட்டு திக்கும் பரவட்டும்.. வாழ்த்துக்கள்..
யதார்த்தங்களையும், அனுபவங்களையும் ஒருசேர விதைத்த பதிவு ..... வாழ்த்துக்கள் அண்ணா!

இந்த பதிவினை வாசித்த போது... எனக்குள்ளும் சில மலரும் நினைவுகள்.... அவற்றை பகிரலாம் என்ற நோக்குடன்.....

//ஞாயிறு சூரியராகங்கள் ... உள் நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டது. நித்தியா மகிந்தகுமார் எனும் இலங்கையின் புகழ்பூத்த பாடகி இந்த நிகழ்ச்சியின் என் சக அறிவிப்பாளராக வாயத்தமை இந்த நிகழ்ச்சியை மேலும் மெருகு படுத்தியது//.


உண்மை தான் நானும் இந்த நிகழ்ச்சியின் ஒரு வெறித்தனமான ரசிகையாக இருந்திருக்கிறேன்.... அதன் உள்ளடக்கம்...தரம்... எல்லாவற்றையும் விட... நீங்களும் நித்தியா அக்காவும் அதை திறம்பட தொகுத்து வழங்கியமை... இவையெல்லாம்... என்னை ஒவ்வொரு ஞாயிறும் அந்த நிகழ்ச்சியின்பால் கட்டிப்போட்டன...


//கலைக்காகவே தங்களை அர்ப்பணித்த குடும்பத்தின் பின்னணியும் நமக்கான இசையை மேலோங்க செய்ய வேண்டும் நமது கலைஞர்களுக்கு வாய்புகள் வழங்க வேண்டும் என்ற வேட்கையும் கொண்டவர் நித்தியா அக்கா.இந்த நிகழ்ச்சி மூலமாக பல புதிய இளம் பாடகர்களை அவர் அறிமுகம் செய்திருக்கின்றார்.கரோக்கி எனப்படும் பாடலிகசகு தொலைபேசி மூலமாக நேயர்கள் பாடும் வாய்ப்பினை இந்த நிகழச்சி வழங்கியது//

உங்களுக்கு ஞாபகம் இருக்கோ எனக்கு தெரியாது...தரம் 11 இல் பயின்ற போது நானும் இந்த நிகழ்ச்சியில் தவமிருந்து (தொலைபேசி அழைப்பெடுக்க) பங்குபற்றினேன்... புதிய முகம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மையழகு பாடல்.....கரோக்கி இசைக்க இசைக்க ... நானும் இசைந்து பாடினேன்..
இன்னும் ஞாபகம் இருக்கு.. நான் பாடி முடித்ததும் நீங்கள் இருவரும் எனக்கு சொன்ன அந்த பாராட்டு.... கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்க நான் தொலைபேசியை வைத்ததும்.. அம்மா என்னை கட்டி அணைத்து முத்தம் தந்ததும் கூட ....

நன்றி உங்கள் பதிவு என்னை ... மெய்சிலிர்க்க வைத்தது... என் மலரும் நினைவுகளை மீட்டியபடியே !


ராஜ் அண்ணாவுக்கும் என் வாழ்த்துக்கள் !

'என்றென்றும் ப்ரியமுடன்'
டயானா சதாசக்திநாதன்
1999 said…
Please support us joining 1999 movie Facebook page

http://www.facebook.com/pages/1999/8769581518

Official Website
http://www.1999movie.com/

IMDB
http://www.imdb.com/title/tt1458389/

Thank You
ரமணன் said…
நன்றி நண்பர்களே,
வித்தியாசமான உங்கள் பின்னூட்டங்கள் மூலம் இந்த பதிவு சிலரையாவது சென்றடைந்திருக்கின்றது என்ற ஆறுதலை அளித்தமைக்கு நன்றிகள்.
இது எனது அனுபவம் மற்றும் ஆதங்கம்.
இந்த பதிவு மூலமாக எதாவது மாற்றங்கள் எங்கள் வானொலிகளில் ஏற்பட்டால் மனமகிழ்வேன்.
இல்லாவிட்டாலும் கூட இது பற்றி அவர்கள் சிந்திப்பதற்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திய திருப்தியை இந்த பதிவு ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவில் முதன்மை தொனிப் பொருளாக நான் கொண்டிருந்த நம்நாட்டு இசையமைப்பாளர் ராஜ் அவர்கள் இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டமை மனதுக்கு நிறைவு தருகின்றது.
அதேபோல் ஞாயிறு சூரியராகத்தின் ஊடக தனது திறமைகளை வெளிப்படுத்திய சகோதரி டயான இன்று பிரபலமான அறிவிப்பாளராக மாறிய பின்னரும் பெருந்தன்மையோடு தனது கடந்த கால அனுபவங்களை இங்கே பதிவு செய்திருப்பது வரவேற்பிற்கும் நன்றிக்கும் உரியது.
பின்னூட்டத்தின் மூலம் இந்த பதிவை அங்கீகரித்த வந்தியத்தேவன், வசி,அப்துல்லா லோகா,கலையரசன்,மற்றும் சப்ராஸ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பிரபா said…
சொலவே இல்ல இப்ப எல்லாமே புதுசா இருக்கு.
மது said…
||| உதித் நாரயணன் கடித்து குதறி துப்பும் எச்சிலை கூட அமுதமாக பருகும் எங்களால் எங்கள் ஊரில் இருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும் நம்மவர்களை கை தூக்கி விட முடிவதில்லை. |||

புரிந்தால் சரி...

உள்நாட்டு படைப்புக்களை அதிகம் விரும்பும் ரசிகன் நான். ராஜ் கூறியது போல நம்மவர்களும் சற்று முயற்சி எடுக்க வேண்டும்.

ராஜின் 1999 பாடல்களில் மலரே..., மொழி.... நெஞ்சத்தை...அருமை... ராஜ்க்கு என் நெஞ்சார்ந்த வாழத்துக்கள். இவரின் இசைப் பணி மேலும் வளர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானொலிகள் உதவ வேண்டும்.

1999 ஒரிஜினல் இசைத்தட்டு வருவரை காதிருக்கின்றேன்.
LOSHAN said…
அருமையான பதிவு ரமணன்.

உண்மையின் எல்லாப் பக்கங்களையும் தந்துள்ளீர்கள்.

எங்கள் பக்கமுள்ள சில நியாயங்களையும் தொட்டுக் காட்டியுள்ளீர்கள்.

நம்மவர் ராஜ் பட்ட சிரமங்கள் கடந்து வந்த தடைகளை நானும் அறிவேன்.


1999 வந்த பிறகு அவரது அத்தனை துன்பங்களும் வெற்றியாக மாறியிருக்கும் என நம்புகிறேன். எங்கள் வானொலியிலும் அவை ஒலிக்கின்றன.

முடியுமானவரை உள்ளூர் பாடல்களை வழங்கினாலும் எதிர்பார்த்தளவு அவை ஹிட் ஆவதில்லை.. இதற்கு நேயர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக சொல்லப் போவதில்லை.

எங்களால் முடியுமானவரை எவ்வளவு தரம் பாடல்கள் ஒலிபரப்பினாலும்.. ம்கூம்..


உங்கள் தொடர் மேலும் எதிர்பார்க்க வைக்கிறது.

குரல் தான் கேட்கமுடியவில்லை என்ற வருத்தம்
ரமணன் said…
நன்றி லோசன்

உண்மையில் எனது ஆதங்கள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதன் அடையாளமாக உங்கள் பின்னூட்டத்தை காண்கின்றேன்.

நடைமுறையில் காணப்படும் சில தடைகளை தாண்டவேண்டிய தேவை உள்ளது.
நிச்சயம் படைப்புகள் தரமாக இருந்தால் நேயர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

படைப்பாளிகள் தங்கள் மீது வைத்துள்ள அபார நம்பிக்கைகளை ஒரு புறம் வைத்து விட்டு நேயர்களின் இரசனை மற்றும் அவர்களின் படைப்புகளின் தரம் குறித்து மீளாய்வு செய்தால் இன்னும் தரமான படைப்புகளை தரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
தரமான பாடல்கள் வந்தால் நாங்கள் வழங்காமலேயே நேயர்கள் அவற்றை தங்கள் விருப்ப தெரிவாக்கிக் கொள்வார்கள்.

பொறுத்திருக்கலாம் அதுவரை..

நிகழ்ச்சி முகாமையளர் என்ற வகையிலும் நேயர்களின் இரசனை பற்றி ஏனையவர்களை விடவும் அதிகம் புரிதல் கொண்டவர் என்ற வகையிலும் உங்களிடம் வரும் புதிய படைப்பாளிகளிடம் உங்கள் தரப்பில் உள்ள கருத்துக்களை தெளிவுபடுத்துங்கள் அவர்கள் விடும் தவறுகள் அல்லது கண்டுகொள்ளமல் விட்ட ஆனால் கண்டுகொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டினால் நிச்சயம் புதியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தரமான படைப்புகளை தருவார்கள்

அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது மூத்த கலைஞர்களை மாற்றுவதற்கு ..... ?????
ரமணன் said…
This comment has been removed by the author.
முதலாவதாக, இசையமைப்பாளர் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எங்களுடைய கலைஞர்களின் பல பாடல்கள் பிரபலமில்லாமல் போனதற்கும் இலங்கையின் வானொலிகள் அவற்றைப் பயன்படுத்தாமற் போனதற்குமான காரணங்களைத் தேடினால் அதிகமான தவறுகள், அந்தப் பாடல்களை உருவாக்குபவர்கள் மத்தியிலும் இருக்கின்றன. இசையிலும் கருப்பொருளிலும் பெரும்பாலும் தென்னிந்தியப் பாடல்களின் சாயலில் உருவாக்கப்படுகின்ற நம்மவர் பாடல்கள் தரத்திலும் ஜனரஞ்சகத்திலும் அதற்கு இணையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறிருக்க முடியாது. அந்த அளவீட்டை எட்ட முடியாத பாடல்கள் மறைந்துபோகின்றன. லோஷன் அடிக்கடி சொல்லுவார் ”வலிந்து ஒரு பாடலைப் பிரபலமாக்க முடியாது” என்று. எங்கள் கலைஞர்கள் எமக்கென்றான வடிவங்களில் பாடல்களைத் தரவேண்டும். அவ்வாறான பாடல்கள் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டுப் பிரபலமடைந்ததை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வானொலி அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை பிரபலமான, அல்லது பிரபலமாகும் என்று அவர்கள் நம்பும் பாடல்களை மட்டுமே தங்கள் நிகழ்ச்சியில் உள்ளடக்கி அதன்வழியாக தங்கள் நிகழ்ச்சியைப் பிரபலமாக்கவே விரும்புகிறார்கள். அது இந்தியத் திரைப்படப்பாடலா அல்லது இலங்கைக் கலைஞர்களின் பாடலா என்று பார்ப்பதில்லை. இப்படி எத்தனையோ ஆயிரம் திரைப்படப் பாடல்களும் கைவிடப்பட்டிருக்கின்றன. முகாமைத்துவங்களும் இதையே எதிர்பார்க்கின்றன.

பிரபலமில்லாத பாடல் ஒன்றைப் பிரமாக்க, அந்த வானொலி நிகழ்ச்சி பிரபலமானதாகவும் அறிவிப்பாளர் மக்களால் அதிகமாக நம்பப்படுபவராகவும் இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அப்படியாக ஒருசில நிகழ்ச்சிகளே இருக்கி்ன்றன.
Raj said…
எல்லோருக்கும் எனது நன்றிகள் :)
ரமணன் , லோஷன் ... இந்த வாதத்தில் நானும் எனது கருத்துகளை பரிமாற்ற விரும்புகிறேன் . சரியா ,தவறா என்று எனக்கு தெரியாது .. இது எனக்குப் பட்டது ...

//முடியுமானவரை உள்ளூர் பாடல்களை வழங்கினாலும் எதிர்பார்த்தளவு அவை ஹிட் ஆவதில்லை.. இதற்கு நேயர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக சொல்லப் போவதில்லை.//

உள்ளூர் பாடல்களுக்கு உள்ள ஒரே போட்டியும் உந்துதலும் இந்திய சினிமாத் துறையே ! எமது பாடல்கள் இந்தியப் பாடல்களையே பின்பற்றுகின்றன .. இந்தியப் பாடல்களுடன் போட்டி போட்டு தோற்றுவிடுகின்றன.. காரணங்கள் ?

1. ஒலிப்பதிவுத் தரம் -சிறந்த ஒலிப்பதிவுக் கூடங்கள்,

2. சிறந்த குரல்கள்

3. மூலதனம்

4. அவை திரைப்படப் பாடல்கள் - - ஆல்பம் பாடல்கள் அல்ல
Raj said…
இந்தியாவில் நிறைய செலவு செய்து விலை மதிப்புள்ள ஒலிப்பதிவுக்கருவிகள் , மென்பொருட்கள் , மிகுந்த ஆள் பலம்/திறமை கொண்ட இசைக்குழுக்கள் (Orchestras-Western and Eastern) எல்லாவற்றையும் பயன்படுத்தி பாடல்களுக்கு இசையமைக்கப் படுகிறது. அவர்களது முதலீடு , ஏதாவது ஒரு திரைப்படத்துக்காக, இலாப நோக்குடன் இருப்பதால் அவர்களால் செலவு செய்து அந்த இசைத் தரத்தை (richness) தரக்கூடியதாக இருக்கிறது ..
நாங்கள் - உள்ளூர் கலைஞர்கள் -அவ்வளவு செலவு செய்து இசையமைக்க முடியுமா ? இல்லை !
ஆனால் , இப்பொழுது உள்ள மென்பொருட்களை பயன்படுத்தியும் , எங்களுள்ளே உள்ள சில சிறந்த ஒலிப்பதிவுப் பொறியியலாளர்களின் உதவியுடனும் , எமது சிறந்த வாத்தியக் கலைஞர்களைப் பயன்படுத்தியும் அந்த இசைதரதுக்கு அருகில் செல்ல முடியும்... இசையைக் கேட்கும் போது நேயர்களால் எமது இசைக்கும் இந்திய இசைக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாமல் செய்வோமானால் - அது முதல் வெற்றி.. நம்மவர்களில் சிலர் அந்த வெற்றியை அடைந்துள்ளனர்.
சிலர் அவர்களை விட இசையில் மிகத் திறமைசாலிகளாக இருந்தாலும் , அடைய முடியாமல் இருப்பதற்கான காரணம் - அவர்களின் பாடல்களில் பாவிக்கப் படும் தொனிகள் (tones), அவர்கள் பாடல்களை வடிவமைக்கும் முறை (arrangement) பழையதாகவும் ஒரே மாதிரியாகவும் (monotonous) இருத்தல், மேடை இசை போன்ற பின்னணி .. நேயர்கள் கேட்டவுடன் "இது உள்ளூர் பாடல் " என்று இலகுவாகக் கண்டு பிடித்து விடுவார்கள் !!!
சிறந்த வடிவமைப்புடன் , சிறந்த ஒலிப்பதிவுத் தரத்துடன் தரமான இசையை ஒவ்வொரு தொனியையும் கவனமாகத் தெரிவு செய்து வழங்கினால், இந்திய இசைக்கும் எமது இசைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது கஷ்டம் !
Raj said…
குரல்கள் - இது உண்மையில் நாங்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. இது மேன்போருட்களாலோ உபகரணங்களாலோ ஈடு செய்ய முடியாததொன்று .
இந்தியக் கலைஞர்களுக்கு நிகரான பாடகர்களை காண்பது அரிது. ஒளிப்ப்பதிவுக் கூடத்தில் Dr. பாலசுப்ரமணியம் , திப்பு , கார்த்திக் ஆகியோர் பாடும் போது ஒலிப்பதிவு கூடம் அதிர்ந்தது. அவ்வளவு பாரம் (weight) அந்தக் குரல்களில் .அத்துடன் தெளிவு(clarity), துல்லியம்(accuracy) , பாவனை(feel) .. ஒலிப்பதிவு நேரம் 30-45 நிமிடங்கள் மட்டுமே !

எமது பாடகர்கள் மேலுள்ளவற்றை பயிற்சி (voice training) மூலமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.. ஆனால் இங்கு இலங்கையில் " கசுன் கல்ஹார" என்ற ஒரு சிங்களப் பாடகரிடம் அது அத்தனையையும் கண்டிருக்கிறேன். அவர் குரல் பயிற்சி வகுப்புகள் கூட நடத்தி வருகிறார் .எம்மவர்கள் எவரும் " பாடல் ஒலிப்பதிவுக் கலைக்கு " குரல் பயிற்சி வழ்ங்குவது குறைவு . நாங்கள் முயற்சித்தால் எங்களாலும் முடியும் .
எமது பாடகர்கள் தயவு செய்து என்னைத் தவறான முறையில் புரிந்து கொள்ள வேண்டாம் !

வானொலி/ தொலைக்காட்சி நிலையங்களுக்கு எனது வேண்டுகோள் .. இந்த நாட்டில் , இப்பொழுது எங்களால் இந்திய தரத்தில் செலவு செய்து தமிழ்த் திரை படங்களை தயாரிப்பதென்பது ஒரு கஷ்டமான விடயம். ஆனால் , நாங்கள் ஏன் ஆல்பம் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாது? எமது கலைஞர்களால் சிறந்த இசை , சிறந்த பாடல் ஒளிபபதிவுகள் (videos). ஒளியும் ஒலியும் தரமாயிருந்தால் ஊடகங்களின் மூலம் மக்களை விரும்பச் செய்யலாம். ஊடகங்களால் முடியாதது ஒன்றுமில்லை. ஆல்பம் இசை சிங்களத்தில் பிரபலமாகி இருக்கிறது. தமிழில் அந்தளவுக்கு இல்லை.. திரைப் படங்களின் முன்னிலையில் இவை பிரபலம் ஆகாது என்று நீங்கள் கூறலாம் .ஆனால், எப்படி இது ஹிந்தியில் சாத்தியமானது ?
Raj said…
கடைசியாக 1999 பற்றி சில வார்த்தைகள்.. முதலில் நான் பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன் . படம் இன்னுமொரு லோக்கல் படமகாத் தானே இருக்கும் என்று எல்லோரும் போல் நம்பினேன். பின்னணி இசைக்காக இயக்குனர் லெனின் படத்தை அனுப்பியபோது நான் நினைத்து பிழை என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்திய பாடங்களில் இருந்து வேறுபட்டு , ஆங்கிலப் படங்களுக்கான தரங்களை மேலதிகமாகக் கொண்டிருந்தது 1999 . பின்னணி இசையை நான் முடித்த போது எனக்குள்ளே ஒரு சந்தோஷம்,... லெனினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .. 1999 - கனடாவில் வாழும் நம்மவர்களால் முற்று முழுதாக உருவாக்கப் பட்ட ஒரு படம் ! நம்மவர்களாலும் இந்திய சினிமாவுக்கு நிகராக படங்களை தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது ! இலங்கையிலும் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.. ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் மாதம் ! உங்களின் ஆதரவு தேவை :)

நன்றி

ராஜ்
Anonymous said…
அன்பின் ரமணன் அண்ணா,
உங்கள் அனுபவ அலசல்கள் என்னை வெகுவாக வியக்க வைத்து!!
ஊடகம் என்ற கடலில் முக்குளித்து வெற்றிகண்ட உங்களின் பதிவுகள், என் போன்ற (ஆர்வ கோளாறான,) ஊடக துறையினை கற்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் என கூறிகொள்வதில் இன்பம் அடைகிறேன்!!
வாழ்த்துக்கள் அண்ணா!!!

அன்பு தங்கை:
சைலஜா பொன்னம்பலம்.
ms-brotaer's said…
அன்பின் ரமணன் அண்ணா,
உங்கள் பகுதியை தற்செயலாய் பார்தேன் பூரித்துப்போனேன். நானும் ஊடகத்துறையில் ஆர்வமுடையவன், கற்பவன் ஆனால்
சைலஜாவை கன நாளாய் காணவில்லை.

suahil
1999 வலைப்பதிவிலிருந்த இணைப்பினூடு இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.

எங்கோ ஆரம்பித்து நிறைய விடயங்களைச் சொல்லியிருக்கிறீங்கள்.

ஒலிவாங்கியால் நீங்கள் எழுதும் கதைகள் நல்லாயிருக்கு.

ராஜ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.CMR ல் அவருடைய பேட்டியின் இறுதிச் சில நிமிடங்களைக் கேட்டேன். பேட்டி கண்டவர் கடைசி சில நிமிடங்கள் வரைக்கும் பெயரைக்குறிப்பிடாமலே கதைத்துக்கொண்டிருந்தார். 1999 என்ற படம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதால் யார் இசையமைப்பாளர் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். இப்படியான பேட்டிகளை இடையில் இருந்து கேட்கும் என் போன்றவர்களுக்காவது யாருடன் பேசிக்கொண்டிருக்கிறம் என்று அப்பப்போ குறிப்பிட்டால் நல்லம்.
காலம் கடந்த் பின்னூட்டம் என்றாலும் இங்கே பின்னூட்டியாகவேண்டும்...

எனக்குத் தெரிந்த ராஜ்குமார் ஒருவர். அவரது குடும்பம் புகழ் பெற்றது. தங்கைகள் மருத்துவத் துறை. பெற்றோர் ஆசிரியர்கள். ராஜ்குமார் பொறியியல் பீடத்துக்குத் தெரிவானவர். அவர் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் ‘கெட்டிக்காரப் பொடியன். ஆனாச் சொல்வழி கேளாமல் விசர்த்தனமா கோஷ்டியளில பாடிறானாம். ஒழுங்கா ஒரு வேலையில நிக்கவும் பஞ்சிப்படுறானாம்' என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது 1999 ன் இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலம் என்ற தேடல் என்னை மீண்டும் ஊரில் பலரால தூஷிக்கப்பட்ட அதே ராஜ்குமாரிடம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ராஜ்குமார் இசைத்துறையில் தனக்கான அங்கீகாரம் பெறப் பட்ட கஷ்டத்தைவிட, அவரது உள்ளார்ந்த திறமைகளை மதியாமல் பெற்ற வசைகளால்தான் அதிகம் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். 1999 க்கு நாங்கள் அளிக்கிற ஆதரவுதான் ராஜ் அண்ணாவின் எல்லாக் காயங்களுக்கும் மருந்துபோடும் என்பது என் நம்பிக்கை. எஞ்சினியரிங், மெடிசின் மட்டும்தான் வாழ்க்கை என்ற மாயைக்குள் எங்கள் சமூகம் பிணைக்கப்பட்டிராமல் இருந்திருந்தால் சிலவேளை ராஜ்குமாருக்கு எப்போதோ அங்கீகாரம் கிடைத்திருக்கும்.... any better late than never

Popular posts from this blog

காலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்

நெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.
உலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.
அவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.

வடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.

பொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…