Skip to main content

நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?


நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரசித்தமான உரையாடலின் வலிமிகு வரிகள் இவை.

இந்த வரிகளின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் வாழ்கை குறித்த புரிதலின் அடிப்படையானவை.

உண்மையில் ஒவ்வொரு மனிதனின் உள்ளும் நல்லவனும் கெட்டவனும் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டையர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எந்த ஒரு மனிதனும் நான் நல்லவன் என்று மார்தட்டிக் கொள்ள முடியாதபடிக்கு செவியில் அறையும் மறுமுகம் ஒன்று அவனுக்குள் இருக்கின்றது என்பது தான் யதார்தம்.

அவ்வாறு என்னால்  அல்லது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதலில் மன்னிப்பு கோரிவிடுகின்றேன்.

என்னளவில் நான் நல்லவனாகவே உணர்கிறேன். ஆனால் எனது நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்தியிருக்கக் கூடும் என்பதை காலமாற்றங்கள் புரிய வைத்து விடுகின்றன.

அது தற்செயலானதாய் அல்லது பின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற தன்மையினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் ஏற்ட்டிருக்கலாம். அல்லது திட்டமிட்டு வேண்டும் என்றே காயப்படுத்தும் நோக்கம் கொண்டதான செயலின் விளைவாக இருந்திருக்கலாம் எது எப்படி இருந்தாலும் தவறு தவறுதான் என்பது உணர்கிறேன்.நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்வர்களுக்கு சில வேளைகளில் கெடுதல்களை ஏற்படுத்தி விடுகின்றோம்.

அதனை உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் நல்லவர்கள் என்ற இறுமாப்புடன் வாழ்வது தான் எங்களின் வாழ்கை முறையாக இருக்கின்றது.

எந்த ஒரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை முற்று முழுதாக நல்லவனாகவோ கெட்டவனாகவோ வாழ்ந்து விட முடிவதில்லை என்பதே காலம் உரத்துச் சொல்லிப் போகின்ற செய்தியாக இருக்கின்றது.

நாங்கள் கைதொழும் ஞானிகளும் மகான்களும் இறை அவதாரங்களும் கூட அவர்களின் வாழ்வின் சில காலப் பகுதிகளில் நல்லவர்களாய் இருக்க முடியாமல் போனதை காலம் பதிவு செய்திருக்கின்றது.

நாம் சந்திக்கும் மனிதர்களும் சந்தர்ப்பங்களும்  எங்களின் முகம் எத்தகையது என்பதை தீர்மானிக்கின்றன.

உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த மிக மிக நல்ல மனிதர் யார் என்று ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் .. அதேபோல் நீங்கள் சந்தித்த மிக மோசமான மனிதன் யார் என்றும் யோசனை செய்யுங்கள்.

இது மிகவும் சிக்கலானது எங்கள் பார்வைப் புலத்தில் நல்லவராக தெரியும் ஒருவர் மற்றவரின் பார்வைக் கோணத்தில் கெட்டவராக மாறிப் போகின்றார்.
அதேபோல் நாங்கள் கெட்;டவர் என்று வெறுத்து ஒதுக்க நினைக்கும்
ஒருவரை வேறு சிலர் நல்லவராக கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

எங்கள் பார்வை தான் மற்றவர் நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கின்றது.நான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்கும் எண்ணங்களை கொண்டவர்களுக்கு அதே எண்ணங்களுடன் வாழ்பவர்கள் நல்லவர்களாக தெரிகின்றார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும் என்றும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே என்றும் நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு குழப்பவாதிகளாகவும் கூடாதவர்களாகவும் தெரிகின்றார்கள்

இது தான் உலக நியதியாக இருக்கின்றது. நாங்களும் இதற்கு விதிவிலக்கனாவர்கள் அல்ல.

மனதளவில் ஒவ்வொருவனும் தான் நல்லவன் என்றே எண்ணம் கொள்கின்றான்.

நாங்கள் எவரும் மற்றவர்களுக்கு தீமைகள் செய்வதாய் ஒருபோதும் உணர்வதில்லை.

மற்றவர்கள் மீது துன்பச் சிலுவைகளை நாங்கள் இறக்கி வைக்கின்ற போது எமக்கு ஏற்படும் அல்லது ஏற்படப் போகும் நன்மைகள் குறித்து மட்டுமே நாங்கள் சிந்திக்கின்றோம்.

அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் இழப்புகள் குறித்தும் சிந்திப்பதற்கும் கவலைப்படுவதற்கும் எங்களுக்கு நேரமிருப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.நான் பணிபுரிந்த இடம் ஒன்றில் ஒரு சிறப்பு நிகழச்சிக்காக சிலரை அழைத்து வந்திருந்தோம்.
நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவரும் வெளியேறிய பின்னர் நாங்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு விடயத்தை அவதானித்தோம்.

அலுவலக கழிவறையில் கை கழுவுவதற்கான தொட்டியின் நீர் வெளிறேயும் துவாரத்தை கழிவறை கடதாசியால் அடைத்து விட்டு அதனுள் சிறுநீரை கழித்து விட்டு ஒருவர் சென்றிருக்கின்றார்.

எத்தனை வக்கிரம் அவரிடத்தில் இருந்திருந்தால் அவர் அப்படி ஒரு செயலை செய்திருப்பார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டியிருந்தது.

இத்தனைக்கும் அது ஒரு விவாதமோ கருத்தரங்கோ ஒருவரை ஒருவர் வசைபாடி மனதை திருகும் வலிகள் தரும் நிகழ்சியோ அல்ல.

அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஒரு சாதாரண நிகழ்ச்சி தான் நடைபெற்றிருந்தது.

அதில் எவர் மனமும் புண்படியான எந்த ஒருவிடயமும் எங்களுக்கு தெரிந்த அளவில் நடைபெறவில்லை என்றே நாங்கள் நம்புகின்றோம்.
ஆனாலும் அதில் கலந்து கொள்ள வந்த ஒருவருக்கு அப்படி ஒரு வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கான தீமையினை நாங்கள் செய்திருக்கின்றோமா என்ற கேள்வி எழுகின்றது.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
அவ்வாறான ஒரு மனநிலை அவருக்கு எங்கள் அலுவலகத்தில் ஏன் ஏற்பட்டது என்பது அவதானமான சிந்தனைக்குரியது.

அவர் யார் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது இன்று வரை எங்களுக்கு தெரியாது.

இதனை ஏன் இங்கு பதிவு செய்கின்றேன் என்றால் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அந்த தீய மனிதன் எதனையும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவன் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.நாம் செய்கின்ற விடயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பற்றிய கவலைகள் இன்றி துணிவுடன் ஒரு விடயத்தை செய்து முடிகின்ற உறுதி கொண்ட ஒருவன் எங்களுக்குள் வாழ்கின்றான்.
சந்தர்ப சூழ்நிலைகள் அவன் வெளியேற விடாமல் அவை எங்களுக்கு அடக்கி பூட்டி வைத்திருக்கின்றன.

தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்!

என்ற வள்ளுவன் வாக்கு வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.
தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை காயப்படுத்தாத வாழ்கையை வாழ வேண்டும் என்றே நாங்கள் எல்லோரும் நினைக்கின்றோம்.
ஆனால் அது சாத்தியமாவதில்லை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து அப்போது தான் மனைவி குழந்தைகளோடு ஒன்றாக உணவருந்துவதற்கு உட்காருகின்றீர்கள்.

அந்த வேளையில் உங்கள மேலதிகாரியிடம்; இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

உங்களிடம் இருக்கும் தெரிவுகள் இரண்டு ஒன்று உணவு மேசையில் எழுந்து இருந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிப்பது. அல்லது அந்த அழைப்பை புறக்கணித்து விட்டு உணவை உட்டகொள்ள தொடங்குவது.
இந்த சம்பவத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு ஒரு தரப்பிற்கு உங்களை நல்லவராகவும் மறு தரப்பிற்கு கெட்டவராகவும் உங்களை சித்தரிக்கும்.
அது எதுவாக இருந்தாலும் அதன் தாக்கத்தை தாங்க வேண்டியவர்கள் நீங்கள் தான் என்பது தான் இங்கிருக்கின்ற உண்மை.

நீங்கள் உணவு மேசையில் இருந்து எழுந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் எழுந்து செல்லுத் நொடியில் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறையற்ற மனிதராக நீங்கள் அந்த நேரத்தில் மாறிப் போவீர்கள். ஆனால் மேலதிகாரி சந்தோசப்படுவார் உண்மையான ஊழியர் என்று பெருமிதப்படுவார். நன்றி சொல்லுவார் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்பார் தனது சந்தேகத்தை அல்லது பொழுது போகமால் இருக்கும் புழுக்கத்தை உங்களில் கொட்டி வைத்து விட்டு அழைப்பை துண்டித்து விடுவார்.

ஆனால் உணவு மேசையில் இருந்து நீங்கள் எழுந்து சென்ற போது அங்கு தோன்றிய குடும்பத்தை விட வேலையை அதிகம் நேசிக்கும் கணவன்... அப்பா... மகன் என்கின்ற தோற்றப்பாட்டை மாற்றுவதற்கு நீங்கள் அதிக நாட்கள் போராட வேண்டியிருக்;கும்.

மறுபுறம் எனக்கு குடும்பம் தான் முக்கியம் மேலதிகாரியை நாளை அலுவலகத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் தீர்மானித்தால் குடும்பத்தினர் மத்தியில் நீங்கள் ஒரு படி மேல் உயர்வீர்கள்.

அடுத்த நாள் மேலதிகாரி விடும் டோஸ்களும் கோஸ்ட் கட்டிங் கதைகளும் உங்களை வேலையில் இருந்த தூக்குவதற்கான ஆயத்தங்களாகவே படும்.

ஆம் மேலதிகாரியை பொறுத்த வரை நீங்கள் பெறுபற்ற பணியாளர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றீர்கள்.

இந்த நிலை நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கும் இனியும் ஏற்படும். துரதிஸ்டவசமாக நம்மில்ட பலர் என்னையும் சேர்த்து தான் இரண்டாவது வழியை தெரிவு செய்வதே இல்லை.

ஏன் என்றால் பணி தொடர்பாக எமக்குள்ள தோன்றிவிட்டிருக்கும் பாதுகாப்பற்ற தன்மை அச்சம் எதிர்காலம் குறித்த ஏக்கம் என பல வித வியாக்கியானங்களை நாம் அதற்கு காரணியாக சொல்லிக் கொள்வோம்.
ஆனால் நாங்கள் பணியிடத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு பாய்ந்து விழுந்து பதிலளிப்பது என்பது குடும்பத்தை பொறுத்த வரை தம்மை உதாசீனம் செய்யும் ஒரு விடயமாகவே கருதப்படும். அவர்களின் மன நிலையில் அது சரியாகவே தான் இருக்கின்றது.தவறு எங்களில் தான் என்கின்ற ஆய்வுகள் நாங்கள் வேலையையும் வாழ்கையினையும் சரியான அளவுகளில் கலக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது தான் இந்த சமனிலைச் சிக்கலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஒரு மனிதனுக்கும் இன்னுமொரு மனிதனுக்குமான தொடர்பு வெளி என்பது எப்போதும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.

நாங்கள் உறவு கொண்டாடும் சக மனிதர்களுக்கும் எங்களுக்குமான கால எல்லையே நாங்கள் எவ்வாறனவர்கள் என்பதை மற்றவர்களுக்குள் பதிவு செய்கின்றது.

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் நடத்தைக் கோலங்கள் தீர்மானிப்பதை விட அவனுக்கும் மற்றவர்களுக்குமான உறவு நிலைகளே தீர்மானிக்கின்றன.

நாங்கள் சந்திக்கும் நல்லவர்களின் உள்ளே ஒரு மறு உலகம் ஒன்று எங்களுக்கு தெரியாமல் ஒளிந்த கொண்டிருக்கும்.

எனக்கு தெரிந்த ஒருவர் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். மிகவும் அன்பானவர் எளிமையானவர் பணியாளர்களுடன் பண்புடன் பழகும் சுபாவம் கொண்ட ஒரு நிர்வாகியாக அவரை நான் அறிந்து வைத்திருந்தேன்.

எந்த ஒரு தீய பழக்கங்களும் இல்லாம் மிகுந்த இறைபக்தி மகிக்வராக விளங்களி அவரை அந்த அலுவலகத்தின் பணியாளர்களம் ஏனைய தரப்பினரும்  மிக உயர்ந்த மனிதராக கொண்டாடியதை நான் நேரடியாகவே அவதானித்திருக்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பான வேளையொன்றில் செய்தித் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அவரின் பெயரை எதேச்சையாக பார்க்க கிடைத்தது.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அந்த அறிக்கையை நான் முழுமையாக வாசித்துக் கொண்டிருந்த போது எனது மனதில் அவர் தொடர்பில் ஏற்படுத்தி வைத்திருந்த " நல்லவர் " என்ற விம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நொருங்கிக் கொண்டிருந்தது.

தனது அன்பான மனைவியை தனது ஆசைக் குழந்தைகளை கொலை செய்யும் அளவிற்கான வக்கிர மனம் அந்த நல்வரிற்குள் ஒழிந்திருக்கின்றது என்பது தான் யதார்த்தமான உண்மை.எங்கள் எல்லோருக்குள்ள வக்கிரங்கள் குரோதங்கள் வன்மகங்கள் என அத்தனை தீமைக் குறிகளுக்கும் அடைந்து கிடக்கின்றன.
தவிர்க்க முடியாத சூழல்கள் உருவாகும் போது அவை வெளிப்பட்டு விடுகின்றன.

சில வேளைகளில் எங்கள் தீய முகங்கள் தரும் போதை காரணமாக நாங்கள் தீய முகத்தோடு தொடர்ந்தும் பயணிக்கத் தொடங்கி விடுகின்றோம்.

நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? பதில் தேடும் பயணம் இன்னும் தொடரும்...


Comments

Popular posts from this blog

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது …

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…