Skip to main content

பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... !

ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆனந்தம் அல்லது ஆணவம் என்பது நான் பேசும் நான் கேட்கும் நான் வாசிக்கும் மொழி சார்ந்தே தான் இருக்கின்றது.

தமிழனின் அடையளம் "தமிழ்” என்பதாக மட்டுமே நான் பார்க்கின்றேன்.
எமக்கான பண்பாடு எமக்கான விழுமியங்கள் என பல கூறுகள் தமிழ் அடையாளம் கொண்டிருந்தாலும் மொழி தவிர்த்து அவற்றை சுமந்து செல்ல முடியாது என்பது தான் உண்மை.தமிழில் பேச முடியாத தமிழில் புரிதல் இல்லாத ஒரு  தலைமுறையோடு வாழும் வாழ்வு தான் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது.
இதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது என்பது எங்கள் எல்லோர் முன்னாலும் இருக்கின்ற கேள்வி.
எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தமிழர்கள் தாம் பேசும் மொழியால் மட்டுமே தங்களுக்குள்ளான பிணைப்புகளை கொண்டிருக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தமிழ் மொழியை பேசாத தமிழ் மொழி பற்றிய புரிதலும் அறிதலும் இல்லாவர்களை தமிழர்களாக கொள்வதில் அவர்களோடு தமிழினின் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் என்மனம் தடை கொள்கின்றது.
தமிழைப் பேசத் தெரியாதவர்கள் தமிழில் வாசிக்க முடியாதர்கள் தமிழ் குறித்து அக்கறை கொள்வதும் அதற்கான பக்கம் பக்கமாய் ஆங்கிலத்தில் பத்திகள் எழுதுவதும் அர்தமற்றதாகவே படுகின்றது.

தமிழ் குறித்து பேச முனைபவர்கள் முதலில் தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும். அதற்கு பின்னர் அடுத்த தெரிவுகள் குறித்து நாங்கள் ஆராயலாம்.

குறைந்த பட்சம் எமது அடையாளத்திற்குரியதான மொழியை பேசுவதற்கே முடியாதவர்களின் பங்குபற்றுதல்களோடு முன்னெடுக்கப்படும் தமிழ் விழாக்களால் எங்களுக்கு என்ன செய்தியை சொல்ல முடியும்.

வேட்டி சட்டை போட்டு சேலை உடுத்து புலத்திலும் நாங்கள் தமிழர்களாக வாழ முற்படுகின்றோம் என்று படம் எடுத்து காட்டுவதை தவிர வேறு நன்மைகள் எவையும் இவற்றால் விளைந்து விடாது என்றே நம்புகின்றேன்.
எங்கள் மொழியை தவிர்த்து விட்டு தமிழர்கள் என்ற அடையாளம் சுமப்பதில் பயன் எதுவும் இல்லை என்பதே என் நிலை வாதம்.

புலம்பெயர் தேசங்களில் தமிழை அழியாமால் காப்பதற்கான "முயற்சிகள்" பெயரளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அதன் போக்குகளும் அது ஏற்படுத்தும் தாக்கங்களும் ஆரோக்கியமானவையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

எங்கள் மொழியின் தொன்மை குறித்தும் அதன் மாண்புகள் குறித்தும் மாற்றின சமூகத்திற்கு தெரிவிப்பதற்கும் தெளிவு படுத்துவதற்கும் முதலில் எங்கள் அடுத்த சந்ததிக்கு அதனை தெளிவுபடுத்துதல் வேண்டாமா ?

கம்பனையும், வள்ளுவனையும் படமாக வரைந்து ஐம்பெருங்காப்பியங்களையும் தமிழ் எழுத்துருக்களையும் விழா மேடைகளில் காட்சிப்படுத்துவது ஒருபோதும் தமிழை வளர்ப்பதற்கு உதவாது. இங்கே பல மேடைகளில் தமிழில் பேசும் தமிழில் பாடும் பலரும் ஆங்கிலத்தில் எழுதிய தமிழையே பயன்படுத்துகின்றார்கள் என்ற கசப்பான உண்மையை நாங்கள் மறைத்துவிட முடியாது.

இது சமூகம் சார்ந்த ஒரு பிரச்சினை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமிழில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்ற வேதனையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் மற்றவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் தந்திரோபாயங்களை இனியாவது நாம் அனைவரும் கைவிட வேண்டும்.

தமிழ் குறிந்த அக்கறையுடன் இயங்குவதாக கூறிக் கொள்ளும் பலரின் வீடுகளில் மருந்துக்கும் தமிழ் இல்லை என்பதை மனம் திறந்து அவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை மாற்றுவதற்கு புலத்தில் தமிழின் வாழ்விற்கு தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வீட்டில் தமிழ் உரையாடல்களையும் தமிழ் வாசிப்பினையும் ஊக்கப்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் முன் வருதலே மாற்றத்திற்கான முதல் படியாகும்.

அதனை விடுத்து ஊடகங்கள் மீதும் ஊடகர்கள் மீதும் காச்சலையும் பாச்சலையும் காட்டுவது மாற்றத்தை தந்து விடாது.

மறுபுறம் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் கலப்படத்திற்கு தமிங்கிலிஸ் என்று பெயரிட்டு புதுமொழி உருவாக்கும் முயற்சிகளை சரியான முறையில் எதிர் கொள்ள முயல வேண்டும்.

இந்த நிலை உருவாவாதற்கு ஒரு சிலரோ அல்லது ஒர சில ஊடகங்களோ மட்டுமே காரணம் என்று கைகாட்டி விட்டு கைத்தட்டல் பெற நினைப்பது வெறுக்கத்தக்க அரிசயலன்றி வேறில்லை.

இந்த நிலைக்கு இங்கு வாழும் நாம் அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும்.
தமிழுக்கு எடுக்கப்படும் விழாவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் உச்சரிக்கப்படும் வார்தைகளுக்கு அனுமதியளிக்கும் ஏற்பாட்டாளர்களும் கூட கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

மூன்று மணி நேரம் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காண்பிக்கும் அக்கறையில் ஒரு சிறு வீதமாவது அது சரியான முறையில் சரியான தமிழில் இடம்பெறுகின்றதா என்பதிலும்; இருக்க வேண்டும் அல்லவா ?
மறு புறம் புலத்தில் தமிழ் நிலை பெறுவதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரியதும் கனதியானதும் என்பது உண்மை தான்.

தமிழ் ஊடகங்கள் தமிழை சரியாக கையாள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்பதில் ஊடகங்கள் கனதியான பங்கினை ஆற்ற வேண்டும்.

ஆனாலும்; ஊடகங்கள் மற்றும் ஊடகர்களால் மட்டுமே இந்த பெரிய பணியை செய்து விட முடியும் என்று எவரும் கருதிவிட முடியாது.

பெருவணிகமாக மாறி நிற்கும் ஊடகத்துறை தன்னை நிலை நிறுத்துவதற்கு மரக்கறி மீன் இறைச்சி விலைகளை கூவி விற்கும் வியாபாரிகளாக மாற்றி விட்டுள்ள ஊடகர்கள் தமிழை வளர்க்க வேண்டும் என்று அதே சமூகம் வேண்டுவது காலக் கொடுமை என்பது தவிர வேறென்ன நான் சொல்ல.

ஊடகங்களை ஊடகங்களாகவும் ஊடகர்களை ஊடகர்களாகவும் இயங்க முடியாத அளவிற்கு பொருளாதார வலைப் பின்னலை வீசி எறிந்து விட்டுள்ள சமூகம் அதற்குள் இருந்து கொண்டு அவர்களை தமிழ் படிப்பிக்க கேட்பது என்பது கூட ஒருவித நகை முரண்தான்.

ஊடகங்களின் இருப்பு என்பது அதன் விளம்பரதாரர்களின் ஆதரவில் மட்டுமெ தான் தங்கியிருக்கின்றது.

அதிகளவு மக்களால் கேட்கப்படும் பார்க்கப்படும் வாசிக்கப்படும் ஊடகங்களே விளம்பரதாரர்களின் தெரிவாக இருக்கின்றது.

தமது இயலுமைகளை வெளிப்படுத்த தம்பக்கம் அதிக மக்களை கவர்ந்திழுக்க ஊடகங்கள் எத்தனை பிரயத்தனங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பதே தனியான ஆய்விற்குட்படுத்த வேண்டிய விடயமாகி இருக்கின்றது.

ஊடகத்தார் எல்லாம் சொர்க்கத்தில் வாழும் வாழ்வு வாய்க்கப் பெற்றவர்கள் அல்ல என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை இங்கே பெரும்பாலான ஊடகர்களுக்கும் அவர்களுக்கு படியளக்கும் நிர்வாகத்தினரும் மிகப் பெரும் பொருளாதார நெருக்குவாரங்களுக்குள்ளும் மன உழைச்சலுக்குள்ளும் தான் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் ஏன் நீங்கள் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு சத்தியமாக என்னிடமும்; பதில் இல்லை.

ஆனால் ஒலிவாங்கியின் முன்னில்லாத நாட்களில் சூனியமான பொழுதுகளை நான் உணர்ந்திருக்கின்றேன். ஏதோ ஒரு வெறுமையில் உளன்றிருக்கின்றேன். இதே நிலை தான் என்னைப் போன்ற எல்லோருக்கும் இருக்கும் என்றும் நம்புகின்றேன். 

ஊடகர்கள் மீது படரும் நல்லதும் தீயதுமான விமர்சனக் கொடிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அவர்களை சித்திரவதை செய்து கொண்டே தான் இருக்கின்றன.

இப்போதும் இணைய வலைகளில் முகம் மறைத்து அநாமதேய முகவரி சூடியபடி இணையத்தில் புரட்சிகள் புரியும் எத்தனை புனிதர்களின் வசைகளை நாங்களும் தாங்க வேண்டியிருக்கின்றது.

நாளை வரும் காசோலைக்கான பணத்தை யாரிடம் என்ன பொய் சொல்லி புரட்டடி வங்கியில் செலுத்தலாம் என்ற யோசனைக்குள் தொலைந்து போகும் நல்ல சிந்தனைகளை எப்போது நாம் மீளப் பெறப் போகின்றோம்.

இத்தனையும் தாண்டித் தான் நாங்கள் சிரித்து பேசி பாடல்களையும் ஒலிக்க விட வேண்டியும் செய்திகளையும் தகவல்களையும் தவறுகளின்றி ஒப்புவிக்க வேண்டியிருக்கின்றது.

உங்களைப் போலவே நாங்களும் மனிதர்கள் எங்களுக்கானதுமான உலகம் ஒன்று உண்டு என்பதை விமர்சகப் பெருந்தகைகள் மனதில் கொள்ள வேண்டும் என காலில் விழுந்து கேட்பதை தவிர வேறென்ன சொல்லிவிட முடியும்.

எங்களால் முடிந்த அளவிற்கு எங்கள் எல்லைகளை மீறாமல் எங்கள் பணியினை நாங்கள் செய்ய எங்களை அனுமதியுங்கள் என்று மன்றாடிக் கேட்கின்றேன்.

மீண்டும் மீண்டும் நீங்கள் காணும் கனவுகளை எங்கள் கண்களின் ஊடாக காட்சிப்படுத்த முனையாதீர்கள்.

எங்கள் தொழில் இது எங்கள் வாழ்வு இது நாங்கள் விரும்பி தெரிந்த துறையில் எங்களை சுதந்திரமாய் இயங்க அனுமதியுங்கள்.

எந்தத் தேர்தலில் நின்றாவது ஆசனத்தை கைப்பற்றிவிடும் ஆசையில் நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் போட்டியிடும் அரசியில் வாதியின் மன நிலையில் எங்களால் இயங்க முடியாது.

யாருடைய உழைப்பையேனும் அடைவு வைத்து எமது வீட்டு கடனை அடைத்துவிடும் சாமர்த்தியம் எங்களுக்கு கைவரவில்லை என்பதற்காய் எங்களை ஏறி மிதித்து நீங்கள் நல்லவர்களாக மாறிவிடலாம் என்று எண்ணி விடாதீர்கள்.

இது எல்லோருக்கும் பொருத்தமான பதிவு அல்ல ஆனால் பொருந்திக் போகின்றவர்களுக்கானது. இது எமது ஆற்றாமையின் வெளிப்பாடு அல்ல இது எங்களின் கோபம்.

இறுதியாக நாங்கள் மட்டுமே தமிழ் வளர்ப்பதற்காய் பிரசவிக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது சாபமிடப்பட்டவர்கள் என்றோ எண்ணியபடி உங்கள் வாசல்களுக்கு அப்பால் தமிழை அண்டவிடாமல் அடித்துச் சாத்திவிட்டு எங்களை சபித்துக் கொட்டாமலிருங்கள் அது போதும்.

எல்லோருக்கும் வாழ்வு என்பது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற் போல் அமைந்து விடுவதில்லை அமையும் வாழ்விற்கு முன்பாக எதிர்பார்ப்புகள் என்பவை  எப்போதும் பயணித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

அது போலவே எங்களுக்கும் நல்லதொரு நாள் விடியும் என்ற நம்பிக்கைகளோடு நாங்கள் ஒவ்வொரு விடியலையும் எதிர் கொள்கின்றோம்.
எங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்புவதையும் உங்களோடு பகிர்வதற்கு முயல்கின்றோம்.அதில் தவறுகள் இருந்தால் தாராளாமா தெரியப்படுத்துங்கள் திருத்திக் கொள்கின்றோம்.

அதைவிடுத்து சமூக அவலங்களுக்கும் அநீதிகளுக்கும் ஊடகங்களும் ஊடகர்களும் மட்டுமே காரணம் என புனிதராகி புளகாங்கிதம் அடையாதீர்கள்.


நீங்களும் நாங்களும் சேர்ந்தது தான் இந்த சமூகம் இதனை மாற்றுவதற்கு எல்லோரும் கூடினால் மட்டுமே முடியம் நீ பிழை நான் சரி என்று மாறி மாறி குற்றம் சாட்டினால் தமிழை தலை முழுகுவதை தவிர வேறு தெரிவுகள் எவையும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு.

இது வலியால் எழுதப்பட்ட பதிவு ஆனால் தமிழுக்கு வலிமை சேர்ப்பதற்கான பதிவு என்பதை மட்டுமாவது மனதில் கொண்டால் போதும்.

வெளியே கொட்டும் பனியில் இந்த நகரம் நிறைந்து கிடக்கையில் ”பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேக விடும் ஒரு முயற்சித்தானோ என்று எண்ணம் தோன்றுவதையும் தடுக்க முடியவில்லை என்னால்

Comments

Anonymous said…
ரமணன்!
அழகான தமிழ் சொற்களில் தெளிவாக உங்கள் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!
- ராஜி

Popular posts from this blog

காலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்

நெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.
உலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.
அவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.

வடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.

பொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…

ஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை

எனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.

சிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.
ஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.

எங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.
அருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.

ஒலிபெருக்கிகள்…